கூட்டுறவு வீட்டுவசதித் துறைக்கு புதிய இணையதளம், HOCO செயலி அறிமுகம்!
தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், புதிய இணையதளம் மற்றும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் இந்த புதிய இணையதளம் மற்றும் செயலியைத் தொடங்கி வைத்தார்.
இதற்காக www.rcshousing.com என்ற இணையதளமும், HOCO என்ற மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முதற்கட்டமாக, இந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் வீட்டுமனைகள் விற்பனை, சங்கக் கட்டடங்களை வாடகைக்கு எடுத்தல், திருமண மண்டபங்களை முன்பதிவு செய்தல், நிதி வசூல் மற்றும் வைப்புத்தொகை வசூல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.
இதற்கு முன்பு சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, கூட்டுறவு வீட்டுவசதித் துறைக்கென தனி டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த இணையதளமும் செயலியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களின் வரலாற்றில் முதன்முறையாக இணையவழி வீட்டுமனை விற்பனை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையைக் குறைத்து, வீட்டிலிருந்தபடியே பல்வேறு சேவைகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
