செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்காக அதிரடி திட்டம் – தமிழகத்தில் 2,355 AI கேமராக்கள்!

பெண்களின் பாதுகாப்புக்காக அதிரடி திட்டம் – தமிழகத்தில் 2,355 AI கேமராக்கள்!

பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தின் 6 மாநகரங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 2,355 அதிநவீன சிசிடிவி கேமராக்களை அமைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய 6 மாநகரங்களில் மொத்தம் 1,045 இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கேமராக்கள் மூலம் வாகனங்களின் எண் பலகைகளை தானாகவே அடையாளம் காண முடியும். திருடப்பட்ட அல்லது காவல்துறையால் தேடப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். மேலும், எண் பலகை இல்லாத வாகனங்களையும் கண்டறியும் வசதி இடம்பெற உள்ளது.

குறிப்பாக, முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண முடியும். சுமார் 50 லட்சம் முகங்கள் கொண்ட தரவுத்தளத்தில் இருந்து தேடப்படும் நபர்களை வெறும் 5 விநாடிகளில் கண்டறியும் வசதியும் இதில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மாநகரிலும் தனித்தனி நவீன கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கேமராக்களும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளன.