நவம்பர் 16-க்குள் காலி செய்ய வேண்டும் – வியாபாரிகளுக்கு அரசு கெடு!
தமிழகத்தில் அரிசி, நெல் மற்றும் பருப்பு வகைகளைப் பதுக்குவதைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு புதிய இருப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசியை இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை விற்பனையாளர்கள் ஒரு கடைக்கு 8 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு மாத உற்பத்திக்குத் தேவையான அளவை மட்டுமே இருப்பு வைத்திருக்க முடியும்.
அதேபோல், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாக இருப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் ஒவ்வொரு வகையிலும் 200 மெட்ரிக் டன் வரையும், சில்லறை விற்பனையாளர்கள் 5 மெட்ரிக் டன் வரையும் இருப்பு வைத்திருக்கலாம்.
மேலும், இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருப்பு வைத்திருப்பவர்கள் நவம்பர் 16ஆம் தேதிக்குள் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். மேலும், இருப்பு விவரங்களை அரசின் இணையதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து புதுப்பிக்க வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகள் அரிசி மற்றும் நெல்லுக்கு 2027 ஜனவரி 31ஆம் தேதி வரையும், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புக்கு மூன்று மாதங்களும் அமலில் இருக்கும். பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது சொந்த விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது.
