செய்திகள்

மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு எச்சரிக்கை! போலி மின்னஞ்சல்களைக் கிளிக் செய்ய வேண்டாம்!

மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு எச்சரிக்கை! போலி மின்னஞ்சல்களைக் கிளிக் செய்ய வேண்டாம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Outlook மற்றும் Teams சேவைகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதைத் தொடர்ந்து, அதன் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் Microsoft 365, Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பின.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் போலியான மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, முடங்கியிருந்த நேரத்தில் பயனர்களுக்கு வர வேண்டிய மின்னஞ்சல்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவை 24 மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிடும் என்றும் போலியான தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

மேலும், அந்த மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து மின்னஞ்சல்களை மீட்டெடுக்குமாறு பயனர்களிடம் வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கணக்கு விவரங்களைத் திருட சைபர் குற்றவாளிகள் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், Microsoft 365 அதிகாரப்பூர்வ நிர்வாகத் தளம் வாயிலாக மட்டுமே சேவை தொடர்பான அறிவிப்புகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.