போர் பதற்றம் எதிரொலி… துருக்கி – கத்தார் அதிரடி ஒப்பந்தம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் மற்றும் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோர் நவம்பர் 13ஆம் தேதி இஸ்தான்புல் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையே இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் துருக்கி – கத்தார் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் ஏற்படுவதைத் தடுப்பது, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்ய துருக்கி தனது ராணுவப் படைகள், ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு மட்டுமின்றி பொருளாதாரம், எரிசக்தி, கல்வி மற்றும் சர்வதேச அமைதி தொடர்பான ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.
