செய்திகள்

போலி நீதிமன்ற உத்தரவு மூலம் 129 இணையதளங்கள் முடக்கம்! – பிரதமர் அலுவலகம் அவசர விசாரணை

போலி நீதிமன்ற உத்தரவு மூலம் 129 இணையதளங்கள் முடக்கம்! – பிரதமர் அலுவலகம் அவசர விசாரணை

போலி உயர் நீதிமன்ற உத்தரவுகளை உண்மையானவை என நம்பி, நாடு முழுவதும் 129 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி, சில இணையதளங்களை முடக்கக் கோரி போலி உத்தரவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் தொலைத்தொடர்புத் துறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் அனுப்பிய இந்த ஆவணங்களில், நீதிமன்றத்தின் சின்னங்கள், முத்திரைகள் மற்றும் போலி QR குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. இதனை உண்மை என நம்பிய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், இணைய சேவை நிறுவனங்கள் வாயிலாக 129 இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இணையதள உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகியபோது, அத்தகைய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரு உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் அலுவலகங்களும் போலி உத்தரவுகள் குறித்து உறுதி செய்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்புத் துறையும் உள்நிலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து தொலைத்தொடர்புத் துறை செயலர் அமித் அகர்வாலிடம் பிரதமர் அலுவலகம் அவசர விளக்கம் கேட்டுள்ளது. இதற்காக அவர் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார்.