டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! 348 ஆக உயர்ந்த AQI – மேலும் மோசமடைய வாய்ப்பு!
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரக் குறியீடு (AQI) 348 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் தலைநகர் டெல்லி மீண்டும் ‘மிகவும் மோசமான’ காற்றுத் தரப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, நவம்பர் 14ஆம் தேதி காலை 9 மணியளவில் டெல்லியின் ஒட்டுமொத்த AQI 348 ஆக இருந்தது. முந்தைய நாள் மாலை 4 மணிக்கு பதிவான 24 மணி நேர சராசரி AQI 373 ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது காற்றின் தரத்தில் சிறிய முன்னேற்றம் காணப்பட்டாலும், மாசுபாட்டின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
டெல்லியில் உள்ள 59 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில், 7 இடங்களில் காற்றின் தரம் ‘கடுமையான’ (Severe) பிரிவில் பதிவாகியுள்ளது. தீபாவளிக்குப் பிறகு பட்டாசு புகை, வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் நடைபெறும் பயிர்க்கழிவு எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, டெல்லிக்கான காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின்படி, அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
காற்றின் தரக் குறியீடு 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான பிரிவாகவும், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.
