செய்திகள்

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் ‘அக்வான்’ புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த வானிலை அமைப்பு அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும், நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நவம்பர் 19ஆம் தேதி இரவு அல்லது 20ஆம் தேதி அதிகாலையில் எண்ணூர் – கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றம் மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.