முதல்வர் முன்பு பேச வாய்ப்பு மறுப்பு.. மேடையை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ!
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மேடையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் இந்தியா – நேபாள எல்லையையொட்டி 10 நாட்கள் நடைபெறும் ஜவுல்ஜிபி திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தார்ச்சுலா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமியும் கலந்து கொண்டார். மேலும், இவர் அந்தத் திருவிழாவின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் முன்னிலையில் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க அனுமதிக்கவில்லை என்றும் ஹரிஷ் தாமி குற்றம்சாட்டினார். முதலமைச்சர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற பிறகு, ஆத்திரமடைந்த அவர் மேடையில் இருந்த மைக்குகள் மற்றும் நாற்காலிகளைத் தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மாநில அரசு எதிர்க்கட்சிகளைக் கண்டு அஞ்சுவதாகவும், மாநிலத்தில் நிலவும் ஊழல்கள் குறித்து கேட்க முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். தனது தொகுதியில் உயிரிழந்த 8 வயது சிறுமியின் சம்பவம் மற்றும் கனார் கிராமத்தின் சாலை வசதி பிரச்சினைகள் குறித்து பேசவே விரும்பியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் உத்தரகாண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
