செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் – தமிழக டிஜிபிக்கு 7 நாட்கள் கெடு விதித்த தேசிய மகளிர் ஆணையம்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் – தமிழக டிஜிபிக்கு 7 நாட்கள் கெடு விதித்த தேசிய மகளிர் ஆணையம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆ*ச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, ஆணையத்தின் தலைவி விஜயா ரஹத்கர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இல்லாமல் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். பெண் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.