கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை! – பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்!
கத்தாரில் நிலவி வரும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அந்நாட்டில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
கத்தார் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, விமானப் பயணத்திற்குத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விசா கால அவகாசம் நீட்டிப்பு!
இதற்கிடையில், காலாவதியான அல்லது விரைவில் காலாவதியாக உள்ள அனைத்து வகையான நுழைவு விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தையும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர காலத்தில் சவுதி அரேபியா வழியாக வெளியேறலாம்!
அவசரத் தேவைக்காக கத்தாரிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சல்வா (Salwa) தரைவழி எல்லைப் பாதை திறந்திருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஷெங்கன் விசாக்களை ஏற்கனவே ஒருமுறையாவது பயன்படுத்தியுள்ள இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வருகை விசா பெற முடியும். மற்றவர்கள் முறையான நடைமுறைகளின்படி சவுதி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், கத்தாரில் போக்குவரத்துப் பயணத்தின்போது சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தற்காலிக சவுதி போக்குவரத்து விசா பெற உதவும் வகையில் தூதரகம் பதிவு வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர உதவி மையத்தையும் செயல்படுத்தி வருகிறது.
அவசர உதவி எண்கள்:
- +974 55647502
- +974 55362508
மின்னஞ்சல்: cons.doha@mea.gov.in
