செய்திகள்

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற விதி ரத்து!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற விதி ரத்து!

மத்தியப் பிரதேசத்தில் 25 ஆண்டுகளாக அமலில் இருந்த இரண்டு குழந்தைகள் விதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களும் இனி அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நவம்பர் 18-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த விதியின்படி, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு 3-வது குழந்தை பிறந்தவர்களுக்கு அரசு வேலை பெற தகுதியில்லை என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச சிவில் சர்வீஸ் பொதுப் பணி விதிகள் 1961 மற்றும் சிவில் சர்வீஸ் நடத்தை விதிகள் 1965 ஆகியவற்றில் திருத்தம் செய்து, இரண்டு குழந்தைகள் கட்டுப்பாட்டை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளும் ரத்து செய்யப்பட உள்ளன.

ஆனால், ஏற்கெனவே இறுதி தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த முடிவு தானாகவே நிவாரணம் வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் அரசு வேலைக்கு தயாராகி வரும் தேர்வர்கள் மற்றும் ஏற்கெனவே அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.