NEET வினாத்தாள் கசிவு வழக்கு.. 14 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய NEET-UG 2026 வினாத்தாள் கசிவு வழக்கில், 14 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் நடைபெற உள்ளது.
டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 14 பேரையும் நவம்பர் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முறையாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. மேலும், பதிப்புரிமைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 3 பாட நிபுணர்கள் ரகசிய வினாத்தாள்களை முறைகேடாகப் பெற்று, மற்றவர்களிடம் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக இடைத்தரகர்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் தொடர்புடையவர்களும் செயல்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து மே 12-ஆம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவால் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
