திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், 2026 ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் அந்த உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய வழக்கமும் இல்லை என்று வாதிட்டார். கோயில் ஆகம விதிகளின்படி, மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த நடைமுறையை மாற்றுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழக்கத்தைத் தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாபடேவும், தற்போதுள்ள நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என வாதிட்டார். மலை உச்சியில் உள்ள தர்காவுக்கு அருகே தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலையில், நவம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடர உள்ளது.
