செய்திகள்

இனி தடையில்லா பயணம்! வாகனங்கள் நிற்காமலேயே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அறிமுகம்!

இனி தடையில்லா பயணம்! வாகனங்கள் நிற்காமலேயே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அறிமுகம்!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (Multi Lane Free Flow – MLFF) முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை நவம்பர் 13 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பேரிகார்டுகள் முன்பு நின்று FASTag மூலம் கட்டணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும். ஆனால், புதிய MLFF தொழில்நுட்பத்தில் வாகனங்கள் நிற்காமலேயே சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியும். இதற்காக சுங்கச்சாவடியில் நவீன கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் FASTag விவரங்களைத் தானாகவே கண்டறிந்து சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயண நேரமும் மிச்சமாகும். குறிப்பாக சென்னை – பெங்களூரு இடையே தினசரி பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் பரனூர் சுங்கச்சாவடியில் MLFF முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியிலும் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் தமிழகத்தின் 2-வது MLFF சுங்கச்சாவடியாக மாறியுள்ளது. தினமும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தச் சாலையில் புதிய தொழில்நுட்பம் போக்குவரத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.