தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு உத்தரப் பிரதேசத்தில் முக்கியப் பொறுப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கே. விஜயேந்திர பாண்டியன், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மண்டலத்தின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, இதுவரை கான்பூர் மண்டல ஆணையராகப் பணியாற்றி வந்த கே. விஜயேந்திர பாண்டியன், தற்போது வாரணாசி மண்டல ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளார்.
அதேபோல், வாரணாசி மண்டல ஆணையராக இருந்த எஸ். ராஜலிங்கம் கான்பூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2008ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான விஜயேந்திர பாண்டியன், இதற்கு முன்பு பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, கோரக்பூர் மாவட்ட ஆட்சியராகவும், கான்பூர் மண்டல ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், தொழில்துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை தொடர்பான கூடுதல் பொறுப்புகளையும் அவர் கவனித்து வந்தார்.
வாரணாசி மண்டல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இவர், வாரணாசி, ஜான்பூர், காஜிபூர் மற்றும் சந்தௌலி ஆகிய மாவட்டங்களின் நிர்வாக ஒருங்கிணைப்பு, வளர்ச்சித் திட்டங்களின் கண்காணிப்பு மற்றும் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளைக் கவனிப்பார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
