சச்சின் கிரிக்கெட் பயணத்தின் நினைவுகள் ஒரே இடத்தில்! வான்கடே மைதானத்தில் ‘பேட்டோகிராபி’ அருங்காட்சியகம் அறிமுகம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் மற்றும் கிரிக்கெட் பயணத்தை நினைவுகூரும் வகையில், மும்பை வான்கடே மைதானத்தில் ‘பேட்டோகிராபி’ (Batography) என்ற பிரத்யேக அருங்காட்சியகப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) சார்பில், வான்கடே மைதானத்தில் உள்ள சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் இந்தப் புதிய பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நவம்பர் 16-ம் தேதி சச்சின் டெண்டுல்கர், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜிங்க்யா நாயக் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் 1978 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான சச்சினின் கிரிக்கெட் பயணத்தை எடுத்துரைக்கும் 25 முக்கியமான கிரிக்கெட் பேட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவர் பயன்படுத்திய ஹெல்மெட்கள், ஜெர்சிகள் மற்றும் தனிப்பட்ட நினைவுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, சச்சின் தனது 5 வயதில் இருந்தபோது அவரது சகோதரி சவிதா பரிசாக வழங்கிய முதல் காஷ்மீர் வில்லோ பேட் முதல், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய பேட் வரை அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன.
1990-ம் ஆண்டு தனது 17 வயதில் மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் சதம் அடிக்கப் பயன்படுத்திய பேட், 1998-ல் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பரிசளித்த பேட், 2003 உலகக் கோப்பையில் பயன்படுத்திய பேட் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், 2012-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 100-வது சர்வதேச சதத்தை அடிக்கப் பயன்படுத்திய பேட்டும் இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பேட்களைத் தவிர, சச்சினின் முதல் ஹெல்மெட், மும்பை ரஞ்சி கோப்பை அணியின் ஜெர்சி, தனது 200-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்த இந்திய அணியின் ஜெர்சி, ஹெல்மெட் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வான்கடே மைதானத்தில் அவர் ஆற்றிய பிரியாவிடை உரையின்போது பயன்படுத்திய குறிப்புத் தாளும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் :
இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்கள் எப்போதும் தனக்கு நெருக்கமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு பேட்டும் தனது கிரிக்கெட் பயணத்தின் வெவ்வேறு காலகட்டங்களையும், மைதான அனுபவங்களையும் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது கிரிக்கெட் பயணம் தொடங்கிய வான்கடே மைதானத்திலேயே இந்த நினைவுப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இந்தியாவின் முதல் கிரிக்கெட் அருங்காட்சியகம் மற்றும் மைதானச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய ஓராண்டில் இதுவரை 23,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக MCA தலைவர் அஜிங்க்யா நாயக் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17 முதல் 22-ம் தேதி வரை அருங்காட்சியகம் மற்றும் மைதானச் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்க முடியும்.
