உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் 18.84 லட்சம் பேர் புதிதாகச் சேர்ப்பு!
உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் (SSR 2027) கீழ் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 13.58 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, தற்போது 18.84 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய வரைவு பட்டியலில் 7.38 கோடி ஆண் வாக்காளர்களும், 6.20 கோடி பெண் வாக்காளர்களும், 4,042 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் குறிப்பாக பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.96 லட்சம் அதிகரித்துள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.87 லட்சம் உயர்ந்துள்ளது. மேலும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 11.83 லட்சம் இளம் வாக்காளர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள நவம்பர் 17 முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐயும், பெயர் நீக்குவதற்கு படிவம் 7-ஐயும், விவரங்களைத் திருத்துவதற்கு படிவம் 8-ஐயும் பயன்படுத்தலாம்.
மேலும், நவம்பர் 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் டிசம்பர் 28ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
