பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்.. ஜவுளித்துறைக்கு புதிய சலுகைகள்.. மகாராஷ்டிரா அமைச்சரவை முக்கிய முடிவுகள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்கல்வி, ஜவுளித்துறை மற்றும் நீதித்துறை தொடர்பாகப் பல்வேறு முக்கிய முடிவுகளை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை எடுத்துள்ளது.
இதன்படி, தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகச் சட்டம் 2016-ல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பரிந்துரையின் அடிப்படையில், இணைத் துணைவேந்தரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் வேந்தருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநிலத்தின் 2023-28 ஒருங்கிணைந்த மற்றும் நிலையான ஜவுளிக் கொள்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பால்கர் மாவட்டம் நேரடியாக மண்டலம் 1-ல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மண்டலம் 4 ரத்து செய்யப்பட்டு, மற்ற மண்டலங்களின் வகைப்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜவுளித்துறை முதலீடுகளுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பால்கர் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காகப் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட உள்ளன.
மேலும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து நக்சலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்ற ஆயுதங்கள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி, தொழில்துறை, நீதித்துறை எனப் பல்வேறு துறைகளில் மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
