சொத்து பத்திரப் பதிவுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை.. தமிழக அரசு புதிய வசதி!
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் பத்திரங்களைத் தயாரிப்பதற்காக இனி இடைத்தரகர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களே தங்களது சொத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் வாயிலாகத் தயாரிக்கும் புதிய வசதியைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவுத்துறையின் மேம்படுத்தப்பட்ட STAR 3.0 திட்டத்தின் கீழ், TNREGINET இணையதளத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைப் பத்திரம், அடமானப் பத்திரம், குத்தகை, செட்டில்மென்ட் மற்றும் பாகப்பிரிவினை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பொதுமக்களே தயாரிக்க முடியும்.
இதற்காக முதலில் TNREGINET இணையதளத்தில் உள்நுழைந்து, தேவையான ஆவண வகையைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் சொத்து விவரங்கள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் விவரங்கள், சாட்சிகளின் தகவல்கள் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். இதையடுத்து இணையதளமே ஆவணத்தின் வரைவை உருவாக்கும். அதனைச் சரிபார்த்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம்.
தொடர்ந்து, தற்காலிகப் பதிவு எண் (TP Number) பெறப்பட்டு, ஆன்லைனில் நேரம் ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நடைமுறைகளை முடிக்கலாம். அங்கு ஆதார் மற்றும் கைரேகை அல்லது கருவிழி வழியாக அடையாளச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய வசதியின் மூலம் ஆவணத் தயாரிப்பில் ஏற்படும் பிழைகளைக் குறைப்பதுடன், இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பதும் குறையும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தத் திட்டத்திற்கு எதிராக ஆவண எழுத்தர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
