செய்திகள்

நாகூர் தர்கா 470-வது கந்தூரி விழா.. சந்தனம் பூசும் வைபவம் கோலாகலம்!

நாகூர் தர்கா 470-வது கந்தூரி விழா.. சந்தனம் பூசும் வைபவம் கோலாகலம்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெறும் 470-வது பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த நவம்பர் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, பல்வேறு வீதிகள் வழியாக நாகூர் தர்காவை வந்தடைந்தது.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு, பூக்களைத் தூவி வரவேற்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.

இன்று அதிகாலை சந்தனக்குடம் தர்காவுக்குள் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகளுக்குப் பிறகு நாகூர் ஆண்டவரின் புனித சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 470-வது கந்தூரி விழா வரும் நவம்பர் 23-ம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது.