பழனி கோவிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை! சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிரடி கட்டுப்பாடு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று காலை 11 மணிக்குப் பிறகு மலைக்கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காலை 11.30 மணிக்குப் பிறகு கட்டண தரிசனச் சீட்டுகள் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற வேண்டிய தங்கரதப் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிற்பகல் 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்குப் பிறகு மலைக்கோவில் சன்னதி நடை சாத்தப்படும்.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மேல் பழனியில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சூரனை வதம் செய்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், இரவு வெற்றி விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
