செய்திகள்

வங்கக்கடலில் புயல் உருவாகும் அபாயம்!

வங்கக்கடலில் புயல் உருவாகும் அபாயம்!

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலம் புயலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஒடிசா மாநிலத்தின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2,000 நாட்டுப் படகுகள், 5,000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.