செய்திகள்

பெங்களூருவில் மெட்ரோ சேவை விரிவாக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய வழித்தடம்!

பெங்களூருவில் மெட்ரோ சேவை விரிவாக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய வழித்தடம்!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் புதிய பிங்க் லைன் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

சுமார் ரூ.3,470 கோடி செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரே வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வழித்தடத்தில் மொத்தம் 6 மெட்ரோ நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கலேனா அக்ரஹாரா, ஹுலிமாவு, ஐஐஎம்பி, ஜெய்நகர் 4வது கட்டம், ஜெயதேவா மருத்துவமனை மற்றும் தாவரகெரே ஆகிய நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழித்தடம் நவம்பர் 14ஆம் தேதி காலை 6 மணி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ஆரம்பகட்டமாக 8 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 5 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 4 ரயில்கள் வழக்கமான சேவையிலும், ஒரு ரயில் மாற்று ஏற்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும். பயணக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம் பெங்களூருவின் மெட்ரோ ரயில் சேவையின் மொத்த நீளம் 103 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

மேலும், பிங்க் லைனின் மீதமுள்ள 13.7 கி.மீ. சுரங்கப்பாதை பணிகள் 2027ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெங்களூருவின் போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் எனக் கூறப்படுகிறது