செய்திகள்

14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து டெய்சி மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்களுடன் இணைந்து பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ள டெய்சி, இருவரும் நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும், பெற்றோர்களாகவும் பல்வேறு வாழ்க்கை நிலைகளைக் கடந்து வந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு இருவருக்கும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், தங்களது குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம் என்றும், குழந்தையை இணைந்து வளர்ப்பதில் இருவரும் பொறுப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதும் மரியாதை இருப்பதாகவும், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகவும் டெய்சி கூறியுள்ளார். மேலும், இந்தச் சூழலில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து, புரிதலுடனும் அன்புடனும் நடந்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் ஆகியோரின் மகள்தான் டெய்சி மார்ட்டின். கடந்த 2012-ம் ஆண்டு ஆதவ் அர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், இவர்களது பிரிவைத் தொடர்ந்து சட்டப்பூர்வ விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.