15 நிமிடங்களில் காலியான ரயில் டிக்கெட்டுகள் – பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு!
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர்.
இதற்கிடையே, இந்திய ரயில்வேயில் தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்பான முன்பதிவு முறையின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
முன்பதிவு தொடங்கியதும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளைப் பதிவு செய்தனர்.
இதில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்களின் முன்பதிவு இடங்கள் வெறும் 15 நிமிடங்களிலேயே முழுமையாக நிரம்பின.
இதனால் பலருக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
