செய்திகள்

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 33-வது நாளாக தொடரும் மர்மம் – காப்புக்காட்டில் சிபிசிஐடி அதிரடி தேடுதல்

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 33-வது நாளாக தொடரும் மர்மம் - காப்புக்காட்டில் சிபிசிஐடி அதிரடி தேடுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில், இன்றோடு 33 நாட்கள் ஆகியும் சிறுமி குறித்து எந்த தடயமும் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அதிகாலை, ஆலம்பூண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார். காலையில் எழுந்து பார்த்த பெற்றோர், சிறுமியை காணாததால் பதறிப்போய் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடினர். எங்கும் கிடைக்காததால் உடனடியாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உள்ளூர் போலீசார், கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். கிணறுகள், குளங்கள், பாழடைந்த கட்டிடங்கள், வயல்வெளிகள் என ஒரு இடம் விடாமல் தேடியும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் வழக்கு மேலும் தீவிரமடைந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கடந்த 23 நாட்களாக இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சந்தேகத்திற்கிடமான நபர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுவரை உருப்படியான தடயம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

காப்புக்காட்டில் இன்று தீவிர தேடுதல்:

இந்நிலையில், சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவாடி காப்புக்காடு பகுதியில் இன்று சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையினர் உடன் இணைந்து நடைபெறும் இந்த தேடுதல் வேட்டையில், ACE, Jack என்ற இரண்டு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிபிசிஐடி போலீசார் 4 குழுக்களாக பிரிந்து, சிறுவாடி காப்புக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பாறை பகுதிகள், புதர்கள், ஒதுக்குப்புறமான இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கிராமம் முழுவதும் தேடிய நிலையில், தற்போது காட்டுப்பகுதியில் தேடுதல் நடைபெறுவது கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீரில் பெற்றோர்:

33 நாட்கள் ஆகியும் மகள் குறித்து எந்த தகவலும் இல்லாததால், பெற்றோர் கண்ணீரும் கவலையுமாக உள்ளனர். “எங்கள் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்” என கதறி வருகின்றனர். கிராம மக்களும் சிறுமி விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிபிசிஐடி போலீசாரின் இன்றைய தேடுதல் வேட்டையில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.