செய்திகள்

காவிரி நீர் கிடைக்கவில்லை… விவசாயிகளின் துயரத்தைத் துடைக்காத தவெக அரசு! – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

காவிரி நீர் கிடைக்கவில்லை... விவசாயிகளின் துயரத்தைத் துடைக்காத தவெக அரசு! – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தருவதிலும், டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தவெக அரசு தோல்வியடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குளங்களில் தேங்கியுள்ள நீரை எடுத்துச் சென்று வயல்களில் தெளிக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கான உரிய நீரைப் பெற்றுத்தர முடியாததாலும், மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்காததாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும், பருவமழை பொய்த்தது, வறட்சி, அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற முடியவில்லை என்றும், மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.