செய்திகள்

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முறையை இன்னும் பயன்படுத்துகிறதா இந்திய ரயில்வே?

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முறையை இன்னும் பயன்படுத்துகிறதா இந்திய ரயில்வே?

ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்போது, காலியாகும் இருக்கைகள் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு RAC (Reservation Against Cancellation) முறையில் ஒதுக்கப்படுகின்றன. இதில் முழுமையான படுக்கை வசதிக்குப் பதிலாக, ஒரு படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் வகையில் இடம் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை பயணிகளுக்குப் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, ரயில் புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான் டிக்கெட் உறுதியானதா என்பது தெரியவருகிறது. இதனால் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். முழுக் கட்டணம் செலுத்தியும் பாதி படுக்கை வசதி மட்டுமே கிடைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

நீண்ட தூரப் பயணங்களில் போதிய இடவசதி இல்லாமல் அமர்ந்தே பயணிப்பதால் முதுகுவலி, கால்வீக்கம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், பகல் நேரங்களில் சைடு அப்பர் படுக்கை ஒதுக்கப்பட்ட பயணிகளும் கீழ் இருக்கையில் அமர உரிமை பெற்றிருப்பதால், ஏற்கெனவே குறைவான இடத்தில் மூன்று பேர் அமர வேண்டிய சூழல் உருவாகிறது. இரவு நேரங்களில் படுத்து உறங்குவதிலும், உடைமைகளை வைப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அதேபோல், அறிமுகமில்லாத நபருடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது தனியுரிமையைப் பாதிப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு ஒரே படுக்கை ஒதுக்கப்படும்போது இருதரப்பினருக்கும் சங்கடமான சூழல் ஏற்படுகிறது. வயதானவர்களுடன் படுக்கையைப் பகிரும்போது, மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் தனது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையும் உருவாகிறது.

இத்தகைய பிரச்சினைகளின்போது டிக்கெட் பரிசோதகர்களும் அவற்றைச் சமாளிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள தற்போதைய காலகட்டத்திலும் பழைய RAC முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா? ரயில்வே நிர்வாகம் வருவாயைப் பெருக்குவதற்காகவே இந்த முறையைத் தொடர்கிறதா? என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கிடையே, படுக்கை வசதிக்கான கட்டணத்தை முழுமையாகச் செலுத்திய பிறகும் ஏன் பாதி படுக்கையில் பயணிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பயணிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, RAC நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.