செய்திகள்

2035-க்குள் 35% மின்சாரப் பயன்பாடு – COP31 மாநாட்டில் புதிய இலக்கு!

2035-க்குள் 35% மின்சாரப் பயன்பாடு – COP31 மாநாட்டில் புதிய இலக்கு!

உலகளவில் மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2035ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மின்சாரத்தின் பங்கை 35 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அந்தல்யா நகரில் நடைபெற்று வரும் COP31 பருவநிலை மாநாட்டில் இந்த இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு சுமார் 21 சதவீதமாக உள்ளது. இதனை அடுத்த 9 ஆண்டுகளில் 35 சதவீதமாக உயர்த்துவதே ’35-by-35′ என்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

மின்சாரப் பொதுப் போக்குவரத்து, மின்சார வாகனங்கள், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் கட்டடங்கள், நவீன மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் மின்சார சேமிப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.

சுரங்கத் தொழிலுக்கு பாதுகாப்பு விதிகள் கோரிக்கை!

மறுபுறம், மின்சார வாகனங்களின் பேட்டரிகள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின்சக்தி சாதனங்களுக்குத் தேவையான கனிமங்களைப் பெறுவதற்காக சுரங்கத் தொழில் அதிகரிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

2025ஆம் ஆண்டில் கனிமச் சுரங்கத் தொழில் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைவிட 73 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழங்குடியின மக்களின் உரிமைகள், வனப்பகுதிகள் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்கக் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என 120-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மின்சாரப் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், அதற்குத் தேவையான கனிமங்களைப் பொறுப்பான முறையில் பெறுவதும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.