ஜிப்மர் பட்டமளிப்பு விழா.. 816 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார் ஜே.பி. நட்டா!
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 816 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த விழாவில் பட்டங்களை வழங்குவதுடன், மாணவர்களுக்கு பட்டமளிப்பு உரையும் நிகழ்த்த உள்ளார். மருத்துவம் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளை முடித்த 592 மாணவர்களும், செவிலியர் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை முடித்த 224 மாணவர்களும் பட்டம் பெற உள்ளனர்.
இதில் 260 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பையும், 192 பேர் எம்.டி. படிப்பையும், 87 பேர் எம்.எஸ். படிப்பையும் முடித்துள்ளனர். மேலும் டி.எம்., எம்.சி.எச்., பிஎச்.டி உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 90 பேர் பி.எஸ்.சி செவிலியர் பட்டமும், 33 பேர் பி.எம்.எல்.எஸ் பட்டமும், 39 பேர் மருத்துவம் சார்ந்த அறிவியல் பட்டமும் பெற உள்ளனர்.
இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் 88 பிரிவுகளில் பதக்கங்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
