செய்திகள்

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்!

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.

அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கினர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை மற்றும் சன்ரைஸ் பாயிண்ட் பகுதிகளில் நள்ளிரவு முதலே காத்திருந்து அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், படகுத்துறையில் இருந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குப் படகில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் அப்பகுதி முழுவதும் களைகட்டியது.