செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகத் தொடக்கம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகத் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி காலை 6.45 மணியளவில், கோயிலில் உள்ள 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான், அருணாசலேஸ்வரர் – உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 20ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளன. நவம்பர் 21ஆம் தேதி மகா ரதத் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும் ஏற்றப்படும்.

இந்த விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.