செய்திகள்

மாணவர்களுக்கு மீண்டும் கல்வி விருது வழங்கும் விஜய்… நவ.26, 27-ல் சென்னையில் பிரம்மாண்ட விழா!

மாணவர்களுக்கு மீண்டும் கல்வி விருது வழங்கும் விஜய்... நவ.26, 27-ல் சென்னையில் பிரம்மாண்ட விழா!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் இரண்டாம் கட்ட விழா நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தவெக சார்பில் பொதுத்தேர்வில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா கடந்த நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளின் மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட விழா சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில் நவம்பர் 26ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், நவம்பர் 27ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்குத் தனித்தனி அடையாள அட்டைகள் மற்றும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரைச் சென்னைக்கு அழைத்து வர பேருந்து வசதி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.